Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்...!



அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச். ஆர். மெக்மாஸ்டரை அதிபர் டொனால்ட் டரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அவருக்குப் பதிலாக ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் போல்ட்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் தனது கொள்கைக்கு எதிரான கருத்து கொண்டவர்களை முக்கியப் பதவியிலிருந்து வெளியேற்றும் ட்ரம்ப்பின் அதிரடி முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

ட்ரம்பிற்கும் மெக்மாஸ்டருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை மெக்மாஸ்டர் ராஜிநாமா செய்துவிட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின.

எனினும், இந்தத் தகவலை மறுத்ததுடன், தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அதிபர் மாளிகை திட்டவட்டமாக கூறியிருந்தது.

இந்நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக ஜான் போல்ட்டனை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளமையை அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார்.

தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளுக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது பதவி விலகும் மெக்மாஸ்டர், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அவரால் நியமிக்கப்பட்ட இரண்டாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »