நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற நடைபயண தொடக்க நிகழ்ச்சி கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை அறிவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை காலை (மார்ச் 31) நடைபெற்றது. நடைபயணத்தை வாழ்த்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பேசினர். அப்போது கூட்டத்தில் திடீரென சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
தலை, உடல் என தீப் பற்றிய நிலையில், அவர் இங்குமங்கும் ஓடினார். இதையடுத்து அவர் மீது மண்ணை போட்டும், தண்ணீர் தெளித்தும் தீயை அணைத்தனர். அப்போது அந்த இளைஞர் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் வரக்கூடாது என கூறினார்.
திடீரென கூட்டத்தில் ஒருவர் தீக் குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த வைகோ உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வைகோ சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தார். உடனே அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
தீக்குளித்த ரவி மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவி நேரில் சென்று பார்த்த வைகோ, அவரை இயற்கை அன்னை காக் கவேண்டும் என்றும், இதுபோல தொண்டர்கள் யாரும் தீக்குளிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கூறி கண்ணீர் வடித்தார். மருத்துவமனையில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், பலத்த தீயக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதிமுக நிர்வாகி ரவி, இன்று திங்கள்கிழமை காலை (ஏப் 2) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரவி உயிரிழந்த சம்பவம் மதிமுக தொண்டர்கள் மற்றும் நியூட்ரினோ எதிர்ப்பாளர்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த ரவி, விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் செயலர் என்று பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே ரவி இழப்பு தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.