வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பிலான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்கான புதிய முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனூடாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்லது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அடையாள ஆவணங்கள், சத்தியக்கடதாசிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் உயிரிழந்த நபரின் உறவினர்கள், சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அல்லது வெளிநாட்டில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்கு குறித்த ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
எனினும், புதிய முறைமையின் கீழ் உயிரிழந்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, அனைத்து பிரதேச செயலாளர்களையும் அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.