இன்றைய திகதியில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இதற்காக தூக்கமாத்திரையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 15 லிருந்து 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
பணிச்சுமை, பணி நேரம், இரவு நேர பணி, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதிலும் தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சு திணறல் காரணமாக தூக்கமின்மைக்கு ஆளாகுபவர்கள் தான் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பகலில் உறக்கம் வரும், காலையில் தலைவலியுடன் எழ நேரிடும். இரவிலோ அல்லது காலையில் எழுந்தவுடனோ தொண்டை வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு இரவு நேரத்தில் வியர்க்கும். இரவில் இரத்த அழுத்தம் உயரக்கூடும். கழுத்து வலி கூட ஏற்படலாம்.
இவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மூச்சு பயிற்சி செய்யவேண்டும். மூச்சு சீராக இருக்கும் போது குறட்டையும் வருவதில்லை. உறக்கமும் நன்றாக இருக்கும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக தூக்கமாத்திரையை சாப்பிடாதீர்கள்.
அதேபோல் இரவில் உறங்குவதற்கு முன் மது அருந்தாதீர்கள். இவையிரண்டு மூச்சு வழியாக செல்லும் காற்றை தடைசெய்யக்கூடும். அதேபோல் சைனஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது மூக்கில் ஏதேனும் ஸ்பிரே போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தவேண்டாம். ஏனெனில் இவற்றினால் கூட மூக்கின் வழியாக பயணிக்கும் காற்றிற்கு தடை ஏற்படலாம்.
டொக்டர் ஜமுனா
தொகுப்பு அனுஷா.